இயற்கையின் படைப்பில் மானுடம் மிக அழகானது. மற்றெந்த உயிர்களுக்குமில்லா பேசும் தன்மை, சிந்திக்கும் தன்மை, பகுத்தறியும் தன்மை, ரசிப்புத்தன்மை போன்றவை பொருந்தி அமைந்த உயிரினமாக மானுடம் திகழ்கிறது. ரசிப்புத்தன்மை என்பது மானுடத்திற்கு மட்டுமே உரியது. இயற்கையை முழுமையாக உணர்ந்து வாழ ரசிப்புத்தன்மை மிக அவசியமாகிறது. இயற்கையை அழகாக உணர மானுடம் மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது.
ரசிப்புத்தன்மைக்கு அடிப்படை காதல். காதலினை இப்படியும் சொல்லலாம். இனவிருத்திக்காக இயற்கை செய்யும் தூண்டுதல் உணர்வின் தொடக்கம் தான் காதல். எனவே காதலின் அடிப்படையாக காமம் இருக்கிறது. எதிரெதிர் வினையினை கவர்வதற்காகவே இயற்கையை நாம் அழகாக பார்க்கக் கற்றுக்கொள்கிறோம்.
உண்மையான அழகை தேடலில் காணலாம். அழகிற்கான தேடல் உள்ளவரை மனிதன் ரசிகனாக இருக்கிறான்.தேடுவதற்கும் அறிவதற்கும் வேறுபாடு உண்டு. தேடுவதற்கு தீர்மானம் இருந்தால் போதும்.ஆனால், பக்குவம் இருந்தால்தான் அறிய முடியும்.
பிரபஞ்சத்தில் படைப்பாளிகளை இருவகைப்படுத்தலாம். ஒன்று இயற்கை. மற்றொன்று படைப்புக்குள்ளேயே படைப்பாளி ஆகிக்கொள்கிற மானுடம்.அம்மானுடம் இயற்கைப் படைப்புக்களை அழகோடு பார்க்கும் பார்வைகளை அழகியல் எனலாம்.
இயற்கையை அழகோடு பார்க்கும் தொடர் பழக்கத்தினால் இயற்கையிலுள்ள பொருட்கள் ரசனைக்குரியதாக மாறுகிறது.
எது விதைக்கப்படுகிறதோ அது சுழலின் தன்மையோடு வளர்த்தெடுக்கப்படும். தற்போது சூழலைப் பொறுத்து ரசனையின் அளவுகோலும் மாறியுள்ளது. ரசனையின் அளவுகோல் மாறியதற்கு மனிதன் இதுவரை தன் மூளையில் உள்வாங்கிக் கொண்டுள்ள பலவிதமான முன் முடிவுகளே அதற்குக் காரணம். இதன் காரணிகளாக ஊடகம்,கடவுள்,மதம்,சாதி,மோட்சம்,நரகம்,ஊழ்வினை,ஆன்மா,வர்க்கபேதம், ஆண், பெண்,
பேதம் போன்றவைகளை கூறிக்கொண்டே போகலாம்.
இயற்கை தன்னை அழகாகவே காட்டிக்கொண்டிருக்கிறது. நாம்தான் பார்க்கத் தவறிக்கொண்டிருக்கிறோம். அழகை ரசிக்க மறந்து விட்டு வாழ்க்கையில் எப்பாடியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என எண்ணுகிறோம்.
உண்மையில் வெற்றி என்பது பொய்த்தோற்றம். வெற்றியினை தேடுவதென்பது சமுதாய நிர்பந்தத்தினால் மட்டுமே. அதன் அடிப்படையாக இருப்பது சமூக நிராகரிப்பு குறித்த அச்சமே. எல்லா ஆசைகளும் அச்சத்தின் அடிப்படையிலேயே அமைகிறது.
தேவை வேறு. ஆசை வேறு.ஆதியில் மானுடம் தேவைக்காக மட்டுமே அழகியலை உள்வாங்கியிருந்தது. ஆனால் தற்பொழுது ஆசைக்காக இயற்கையான அழகியலை மறந்துவிட்டு செயற்கைத் தன்மைக்கு மானுடம் மாறியிருக்கிறது.
புதிதாகக் கற்றுக்கொண்டு வாழத்தேவை யில்லை. வாழத்தடைகளாகக் கற்றுக்கொண்டவைகளை மனதிலிருந்து அழித்து விட்டால் போதும்.
தேவைக்கேற்ப மட்டும் ஆசை அமைந்தால் தெளிவும், நிதானமும் தானாகப்பிறக்கும். தெளிவு பிறந்து விட்டால் பார்வை தெரியும். பார்வை தெரிந்தால் பாதை தெரியும்.
பார்வையானது ஒருவருக்கொருவர் கொண்டுள்ள முன் முடிவுகளின் அடிப்படையில் தேவை சார்ந்து மாறுபடுகிறது. முன்முடிவுகளால் இயற்கையிலுள்ள மானுடம் இயற்கையுடன் அந்நியப் பட்டு நிற்கிறது.
வாழ்க்கை என்பது ஒவ்வொரு கணத்தையும் முழுதாய் ஆக்கிக்கொள்வதுதான்.
புவியிலுள்ள பொருட்களை மானுடம் ரசிக்கக் கற்றுக்கொண்டதால்தான் நமக்கு பல்வேறு கலைகள் கிடைத்தது. ஆக்கப்பூர்வமான விடயங்கள் அனைத்தும் அழகியல் தன்மையோடுதான் நிகழ்ந்தேறியுள்ளது .அழகியலற்ற தன்மை மானிடத்தை அற்ப நிலைக்கு தள்ளிவிடும்.
முன்முடிவுகளால் ஏற்படுத்திக்கொண்ட எதிர் மறைகளை விலக்கி, நேர்மறைகளை நோக்கி பார்வையினை செலுத்தினால் இப்புவி அழகாகும்.
அழகியலை மானுடத்திற்கு விளக்க வேண்டிய கலை வல்லுனர்களே முன்முடிவுகளால் குறுகி விற்ப்பன்னர்களாக மாறியுள்ளது வருந்தத் தக்கது.கலைகளை தவிர்த்து விட்டு வரலாறு என்பது கிடையாது. உண்மையான வரலாறு என்பதை கலை,இலக்கியங்களிலிருந்து மட்டுமே அறிய முடியும்.கலை,இலக்கியம் உருவாக அழகியல் தன்மை முதன்மையாக உள்ளது.
ஆக,அழகியல் பார்வையை விரிவுபடுத்துவோம்.
அழகியலோடு வாழ்வோம். அழகியலோடு உண்மை வரலாற்றை மானுடத்திற்கு அளிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக