உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

06 மே 2011

வரலாற்றின் தொடக்கம்...


தமிழ்ச் சமூகத்திற்கு பெண்ணியம் என்பது புதிய சிந்தனையல்ல.இலக்கியங்களில் அறம் வளர்த்தவளாக மணிமேகலை,சமூகத்திற்கு தீங்கிழைப்பவர்களை அழிப்பவளாக குண்டலகேசி என பல்வேறு தளங்களில் பெண்கள் கோலோச்சிய காலங்கள் காணக்கிடக்கின்றன. ஆனால் சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், அறிவு ஜீவிகளால் சமூக வளர்ச்சி, தேச நலம் போன்றவைகளில் ஒற்றுமையாக செயல்பட முடிந்தாலும் பெண் விடுதலை சார்ந்த கருத்துக்களில் நெடுங்காலமாகவே மாறுபட்டே இருந்து வந்துள்ளனர்.


வரலாற்றில் தாய் உரிமைச் சமுகம் ஆதிச்சமுதாய அமைப்பாக இருந்துள்ளது. வேட்டைச் சமுகத்திற்கு முந்தைய காலங்களில் உணவு தேடுவதே வேலையாக இருந்தது.ஆண்,பெண் பிரிவினை என்பது இல்லாதிருந்தது. குழந்தைப்பேறு, பாலூட்டுவது போன்ற செயல்களால் பெண் முன்னுரிமை பெற்றிருந்தாள். ஈட்டி, வேல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதும் வேட்டையானது ஆணின் தொழிலாக மாறிற்று. மேய்ச்சல் மற்றும் உணவு சேகரிப்பிற்காக விவசாயத்தை பெண்களே கண்டுபிடித்தனர்.உழு கலப்பைகள் கண்டுபிடித்தவுடன் விவசாயம் ஆண்கள் வசமாயிற்று. ஆண்களின் கைகளில் பொருளாதார பலம் குவிக்கப்பட்டது. அப்பலம் பெண்களின் மீது எளிதாக ஆண்களால் பிரயோகிக்கப்பட்டது. அப்பொழுது கால்நடைகளை கொடுத்து பெண்களை விலைக்கு வாங்கினர். தவிர்க்க முடியாதபடி ஆணாதிக்க சமூகம் நிறுவப்பட்டது. தனிச்சொத்தின் தோற்றத்திற்கும் பெண் அடிமைத் தனத்திற்கும் நேரடி தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்று எங்கல்ஸ் கூறுவது கவனிக்கத்தக்கது.

பின்னர் அந்த அடிமைத்தனத்தை மத நிறுவனங்கள் கையில் எடுத்துக்கொண்டு பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. பெண்ணானவள் ஆணின் உடைமை. உடைமையினை மறு உற்பத்தி செய்பவள் என்று செயற்கை பொறுப்புக்களில் திணிக்கப்பட்டதால் அவளுடைய பாலியல் அவளுக்குரியதாக இன்றி, ஆணுக்காகவும், அவனால் கையாளக் கூடியதாகவும் ஆக்கப்பட்டது.

இயற்கையானது பெண்ணையும், ஆணையும் சமமாகவே நிலைநிறுத்தியுள்ளது. இயற்கை இயங்கு விதியில் இது ஒரு நட்பு முரண். இந்த நட்பு முரண் இல்லையெனில் மனித குலம் அழியும். இம்முரணை வர்க்க பேத, சாதிபேத மற்றும் அனைத்து ஆதிக்கத்திற்கும் அடிப்படைத் தளமாக கட்டமைத்துவிட்டது ஆணாதிக்க உலகம்.

மதம், சமூகம், தத்துவம், அரசியல், பொருளியல் எல்லாமே ஆண்களின் தனிப்பட்ட உரிமையாகவே இருந்து வருவது வரலாற்றின் வெறுப்பூட்டும் தொடர் உண்மையாகும். இதனால் பெண்கள் சமூக கடமையற்றுவதற்கு வாழ்வியல் சுழல்கள் பெருந்தடையாக உள்ளது.

பருவ வயதடையும் வரை ஆண், பெண் இருவருக்கும் எவ்வித மாறுபாடுகளும் இருப்பதில்லை. வழிவழியாக சமூகம் தன் மூளையில் பதிவாகிய படிமங்களைக் கொண்டு, ஆண் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு பொருட்கள், உடைகள் போன்றவற்றை தனித்தனியே பிரித்து வழங்கிக்கொண்டிருக்கிறது. இது பள்ளி, கல்லூரிகளிலும் அழுத்தமாக கற்பிக்கப்படுகிறது.

இப்பொழுதெல்லாம் பெண்கள் எவ்வளவோ முன்னேறி விட்டார்கள் என கூறுவது ஆணாதிக்க சிந்தனையின் மறுவடிவமாகவே காண முடிகிறது. இவர்கள் விதிவிலக்குகளை கணக்கிலெடுத்து விதிகளை காண மறுப்பவர்கள்.

இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்களுக்கான பல சட்டங்கள், சங்கங்கள், புத்தகங்கள் பல வந்துள்ளன. இருப்பினும் இன்னும் வெறும் உடம்பாக மட்டுமே பார்க்கும் பார்வை மட்டும் மறைய மறுக்கிறது. பெண்ணை அடிமையாக பார்க்கும் பார்வையானது நாம் பழங்கால மூட நம்பிக்கையினை இன்னும் விடாமல் வளர்த்துக் கொண்டிருப்பதாகவே கருத முடியும்.

மேலும் பல பெண்கள் தங்களுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகளை பிரித்தறியத் தெரியாமல் இருக்கின்றனர். சலுகைகளை விட்டொழித்தால்தான் உரிமைகளை பெற முடியும் என்பதை உணர்தல் வேண்டும்.

தற்பொழுது திருமணங்கள் பெரும்பாலும் ஆணுக்கு மகிழ்ச்சியானதாகவும், கூடுதல் இணைப்பாக வேலைக்காரி, சமையல்காரி, தாய், தாசிகளுடன் கிடைப்பதாகவே எண்ணுகிறான். தன் அழைப்பிதழில் கூட வாழ்க்கை இணையர் என்பதற்கு பதிலாக வாழ்க்கை துணை என அச்சிட்டு தன்னுடைய ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துகிறான்.

ஆணுக்கு உள்ளது போல் பெரும்பான்மை பெண்களுக்கு திருமணம் மகிழ்ச்சியளிக்காமல் புதிய கடமைகள், புதிய சுழல்கள் போன்றவை குறித்து அச்சமூட்டுபவையாகவே இன்றும் உள்ளது.

ஊடகங்கள் அனைத்தும் ஆணாதிக்க சூழலுக்கு ஆதரவு அளிப்பதாகவே உள்ளது. கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே இருக்க வேண்டுமென்கிறது.

இச்சிந்தனை மாற்றத்தினை எழுதுவதலோ, பேசுவதாலோ மாற்றி விடுதல் என்பது இயலாது. ஆண், பெண் சமத்துவத்தின் அடிப்படை அறிவியல் பூர்வமான வேலைப்பிரிவினையோடு கூடியதாக நம் மாற்றி அமைக்கப்பட்டு தொடங்கப்படுதல் வேண்டும்.

மனித இனத்தை செழுமையாகவும், முழுமையானதாகவும் வார்த்தெடுக்கும் நிகழ்வுகள்தான் மனித குல வரலாறு. உண்மையான மனிதகுல வரலாற்றின் தொடக்கம் பெண் விடுதலையிலிருந்துதான் பெற முடியும்.

கல்வி